நன்றி குங்குமம் டாக்டர்
நம்மை காக்கும் வாசனைமிக்க அற்பத மூலிகை கற்பூரவள்ளி. இது நமது முன்னோர்களால் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த மூலிகைகளில் ஒன்று. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளித்தொல்லை பிரச்னைக்கு நல்ல தீர்வாக அனைவராலும் கற்பூரவள்ளி பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு ஓமவள்ளி என்ற பெயரும் உண்டு. இது தமிழ் மருத்துவ முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்பூரவள்ளி புதர் செடி போன்று வளர்ந்து தமிழகமெங்கும் பரவலாக கிடைக்கப்பெறும் மூலிகையாகும். இதனை வீட்டுத் தோட்டங்களிலும், மருத்துவ மூலிகைத் தோட்டங்களிலும் மிக எளிதாக வளர்க்கமுடியும். அனைத்து தட்பவெப்ப சூழலையும் தாங்கி வளரும் இயல்புடையதால் கற்பூரவள்ளி ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறும் தாவரமாகும். குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தாஸ், ஆப்பிரிக்கா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் காணப்படும்.
இது சுமார் 50 செ.மீ. முதல் – 100 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் நல்ல பசுமை நிறத்துடன் சற்று தடித்து காணப்படும். இதில் ஊதா அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிற பூக்கள் காணப்படும். இதன் இலைகள் கற்பூரம் போன்ற வாசனையை கொண்டிருக்கும். இது காரமான மற்றும் துவர்ப்பு சுவையை உடையது.இதன் அறிவியல் பெயர் – பிளக்ட்ரான்தஸ் ஆம்போனிக்கஸ் (plectranthus, amboinicus) ஆகும்.
கற்பூரவள்ளியில் விட்டமின் ஏ, சி, நிறைந்து காணப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளன. மேலும், இதில் ஆல்பா லினோலினிக் அமிலம், கார்வாக்ரோல், திமோல், பைனின், எருசலினிக் அமிலம், ஒமேகா -3, கொழுப்புச்சத்தும் உள்ளன. கற்பூரவள்ளி பல்வேறு மருத்துவ பண்புகளை பெற்று சிறந்து விளங்குவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
கற்பூரவள்ளியின் மருத்துவ பண்புகள்
மழைக்காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் சார்ந்த பிரச்னைக்கு இயற்கையின் வரபிரசாதமாக கற்பூரவள்ளி பயன்படுகிறது. மூச்சுதிணறல், நுரையீரல் தொற்று, நாசி அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கும் கற்பூரவள்ளி உதவுகிறது. ரத்த அழுத்தம் கட்டுப்பாடு மற்றும் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கவும் இது பயன்படுகிறது. விட்டமின் ஏ மற்றும் சி கற்பூரவள்ளி கொண்டுள்ளதால் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகவும் கண்பார்வையை மேம்படுத்தவும் சிறந்து விளங்குகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்னைகள் அத்துனைக்கும் தீர்வாக கற்பூரவள்ளி பயன்படுகிறது.மேலும் மூட்டுவலி, பற்சிதைவு, ஈறுகள் சார்ந்த பிரச்னைகள், இதயத்தை பாதுகாத்தல் என பல மருந்து பயன்களை கற்பூரவள்ளி தரக்கூடியது.
கற்பூரவள்ளி பயன்படுத்தும் முறை
மூன்று முதல் நான்கு இலைகள் வரை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். கற்பூரவள்ளி இலைச்சாற்றினை தேனுடன் கலந்து உட்கொள்ளலாம்.நாசி அடைப்பு மற்றும் அதிக சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் கற்பூரவள்ளியை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்து பயனடையலாம்.வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டால், கற்பூரவள்ளி இலையை சாப்பிடலாம். இது ஒரு சிறந்த மவுத் ப்ரெஷ்னர் ஆகும். தினமும் காலையில் ஒரு கற்பூரவள்ளி இலை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதை உணவுக்கு பின்னரும் சாப்பிடலாம்.
கற்பூரவள்ளியை பயன்படுத்தும் முறைகள்
உளுந்தம் பருப்பு, தேங்காய் மற்றும் கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய் மற்றும் புளியுடன் சேர்த்து துவையல் போல் செய்தும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கற்பூரவள்ளி இலைச் சாற்றை தினமும் காலையில் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர குழந்தைகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் திகழ்வார்கள்.சிறு குழந்தைகளுக்கு மார்புச்சளி பிரச்னையை தடுக்க இதன் இலைச்சாற்றினை குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவி வர எளிதில் குணமாகும்.
கற்பூரவள்ளி இலையை உலர்த்தி, அதில் தேநீர் செய்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சு நீங்கும். இது ஒரு சிறந்த டீடாக்ஸ் பானம். இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் நியாசின் போன்ற பண்புகள் உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக வைக்கும். ஒரு கப் தண்ணீரில் கற்பூரவள்ளி இலைகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
இத்தகைய நன்மை அளிக்கும் கற்பூரவள்ளியினைப்பற்றி குணப்பாட நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்பூரவள்ளியின் குணம்
காச விருமல் கதித்தம்மை சூரிஐயம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் – வீசுசுரங்
கற்பாறை யொத்துநெஞ்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூரவள்ளிதனைக் கண்டு.
தொகுப்பு: தவநிதி