நன்றி குங்குமம் டாக்டர்
திப்பிலி ஈரமானது, காய்ந்தது என்று இருவகையாகும். இதில் ஈரமான (பச்சையான) திப்பிலி நெஞ்சுக்கூட்டில் சளியை அதிகப்படுத்தும். இனிப்பும் குளிர்ச்சியுமானது. செரிப்பதற்குக் கடினமானதாகவும், நெய்ப்பு எனும் எண்ணெய்ப்பசை நிறைந்ததாகவும் இருக்கும்.திப்பிலியை நன்கு காயவைத்து அதிலுள்ள நீர்ப்பசைவற்றிய பிறகு எடுத்தால், ஈரமான திப்பிலியின் பல குணங்களுக்கும் எதிரானதாக இருக்கும். ஆனால் உடலுக்கு நெய்ப்பை தொடர்ந்து தரும். சுவையில் காரமாக இருந்தாலும் சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும். நெஞ்சில் சளி நிறைந்து மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும், அதனால் ஏற்படும் இருமலுக்கும் நல்ல மருந்தாகும். மலச்சிக்கலை நீக்கி குடலைச் சுத்தப்படுத்தும்.
அதிக அளவில் திப்பிலியைப் பயன்படுத்தக் கூடாது. சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டும், கரகரப்பும், கோழையும் உள்ளவர்கள் – காய்ந்த திப்பிலியைச் சுத்தம் செய்து, நெய்யில் வறுத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கால் முதல் அரை தேக்கரண்டி வரை, தினமும் காலை, மாலை வேளைகளில் தேனில் குழைத்துச் சாப்பிட, தொண்டையிலுள்ள கோழையை அகற்றும், கரகரப்பும், தொண்டைக்கட்டும் குணமாகும். நாக்கு சுவையின்மை என்ற பிரச்னையும் தீரும்.
திப்பிலிக்கு மேலும், சில நல்ல மருத்துவப் பலன்கள் உள்ளன. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் குணமாக திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றைச் சம எடையாக வறுத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு (திரிகடுகு சூரணம்), அரை தேக்கரண்டி தேனில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை, ஏழு நாட்கள் வரை சாப்பிடலாம்.
தேமல் குணமாகவும், குரல் வளம் ஏற்படவும் திப்பிலித்தூள் அரை தேக்கரண்டி அளவு, தேவையான அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். காலை, மதியம், மாலை வேளைகளில் ஒரு மாதம் வரை சாப்பிடலாம். இது குடல் வாயுவைப் போக்கும். சத்து மருந்தாகும். வயிற்று உப்பசத்திற்கான மருந்தாகப் பயன்படுகிறது. செரியாமை மருத்துவத்திலும் பயன்படுகிறது. இலைகள், பழங்களின் நோய் எதிர்ப்புத்திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
பத்து கிராம் திப்பிலியை நன்கு விழுதுபோல அரைத்து சிறிது இந்துப்பு சேர்த்து நெய்யில் வதக்கி தயிர் அல்லது தயிர் மேல் நிற்கும் தண்ணீருடன் கலக்கிச் சாப்பிட, வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் கடும் வறட்டு இருமலானது குணமடைகிறது.முதல் நாள் பத்து திப்பிலி, இரண்டாவது நாள் இருபது திப்பிலி, மூன்றாவது நாள் முப்பது திப்பிலி என்ற கணக்கில் பத்து – பத்தாகக்கூட்டி பத்தாம் நாள் முதல் பத்து – பத்தாகக் குறைத்து இறுதியில் பத்து திப்பிலியுடன் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் அது நன்கு திரிந்து பசி ஏற்பட்டவுடன், அறுபது நாளில் விளையும் அரிசியைச் சாதமாக வடித்து அதில் பால் மற்றும் நெய் சேர்த்துச் சாப்பிட, நீண்ட ஆயுள், ஞாபகசக்தி, நல்லறிவு, ஆரோக்கியம், இளமை, தேககாந்தி, நிறம், குரல்வளம், புலன்கள் வலுவடைதல்.பேச்சுத்திறன் போன்றவை நன்கமையும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இதற்கு ரசாயன சிகிச்சை என்று பெயர். இதைத் தொடங்குவதற்கு முன், குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி – பேதி சிகிச்சைகளைச் செய்த பிறகு செய்வது மிகவும் நல்லது.
திப்பிலியை விழுதாக அரைத்து இரும்புப் பாத்திரத்தின் உள் பகுதியில் பூசி, சிறிது காய்ந்ததும் அதில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை, தன் உள்ளங்கைகளால் இருமுறை அந்தத் தண்ணீரை அள்ளிப் பருக, உடல் ஆரோக்கியமானது மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தியானது கூடும். சுமார் ஒரு வருடம் இதைத் தொடர்ந்து சாப்பிடக் கூடிய அருமருந்தாகும். இருமல், மூச்சிரைப்பு, தொண்டைவலி, காசநோய், சர்க்கரை உபாதை, கிராணி, மூலம், சோகை, முறைக்காய்ச்சல், வீக்கம், வாந்தி, விக்கல், மண்ணீரல் வீக்கம், முடக்குவாதம் போன்ற உபாதைகளின் தாக்கம் நன்கு குறையும்.பிப்பல்யாஸவம் என்ற ஆயுர்வேத மருந்து சாப்பிட்டால் – உடல் இளைப்பு, குல்மம் போன்ற உபாதைகள் மாறுவதுடன், குழந்தைகள் உணவை ஆசையுடன் சாப்பிடத் தொடங்குவர்.
தொகுப்பு: ரிஷி