ஊத்துக்கோட்டை:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் 1994ம் ஆண்டு முதல் ஆலோசகர்கள், ஆய்வக நட்புனர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், விவரக் குறிப்பு மேலாளர்கள், சமூக நல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் என பல பொறுப்புகளில் தமிழகம் முழுவதும் 2,500 பேர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் எச்ஐவி தடுப்பு பணிகளில் எச்ஐவி ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் (நம்பிக்கை மையம்), ஏஆர்டி மையம், பால்வினை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம், ரத்த வங்கி ஆகிய பிரிவுகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இதைத்தவிர மருத்துவமனைகளுக்கு வெளியே நடமாடும் நம்பிக்கை மைய ஆலோசகர் மற்றும் ஆய்வக நட்புநர் மூலமாக மலை பிரதேசங்களில், குக்கிரமங்களில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையும் செய்து வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் 100 சதவீதம் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கப்படுகிறது. இதற்காக 18 மாதம் மருந்து மாத்திரைகள் கொடுத்தும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களது வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 2020 முதல் 3 ஆண்டுகளில் மட்டும் மருத்துவ காப்பீடு இல்லாமல், மருத்துவம் பார்த்துக்கொள்ள வசதி இல்லாமல் 16 ஊழியர்கள் இறந்துள்ளனர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி திட்டம், இறப்பு நிவாரண நிதி (குடும்ப பாதுகாப்பு நிதி) போன்ற அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாததால் இறந்த ஊழியர்களின் குடும்பம் நிராதரவாக நிற்கிறது. ஆகவே ஒன்றிய, மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி திட்டம், இறப்பு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.