சென்னை: மெடிக்கல் கவுன்சில், பார் கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்பாபு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பார் கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் போன்ற அமைப்புகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பதவிகளில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு மனு அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த விஷயத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தில் வாய்ப்பு வழங்கும் வகையில் உரிய இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் ரமேஷ் பாபு சார்பில், வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜராகி, மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் உள்ள அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்றார். எனவே, இந்த அமைப்புகளில் பிரதிநிதிகள் நியமனத்தில் 4% இடஒதுக்கீடு வழங்குமாறு ஒன்றிய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் சட்ட பிரிவு 34ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளிலும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அதற்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையர் வழிவகை செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.