சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில், 1474 பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மீதமுள்ள அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
இந்நிகழ்வில் 946 மருந்தாளுநர் பணியிடங்கள், 553 உதவியாளர் பணியிடங்கள், 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர் பணியிடங்கள் என 1474 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அவரவர் சொந்த பகுதிகளிலேயே பணிநியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. அப்போதுதான் அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள்.
ஆனால் சொந்த பகுதியில் காலியிடம் இல்லாத பட்சத்தில் கிடைக்கும் இடத்தில் பணி நியமனம் பெற்றுச் செல்ல வேண்டும். ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் காலை 5 மணிக்கு எல்லாம் பணியிட மாறுதல் வேண்டி எனது முகாம் அலுவலகத்தில் வந்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி வரக் கூடாது. இதனையும் மீறி யாரையாவது அழைத்துக் கொண்டு நிறைய பேர் வருகிறார்கள். அதையும் மீறி எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக எங்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் 17(b) போன்ற விதிகள் மூலம் துறை ரீதியான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்.
இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு 4215 பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மொத்தம் 5670 பேருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. வெளிப்படையான கலந்தாய்வு அடிப்படையில் இதுவரை 36,465 பேருக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இன்னமும் 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.