ராமநாதபுரம் : கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற பேரூராட்சி ஊழியர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோயாளிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கமுதி அரசு மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகள் பிரிவிலும் நாள்தோறும் 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குள்ள பிரசவ பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகளில் தினசரி சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், உணவு பொட்டலங்களின் கழிவுகள், மருந்து பெட்டி கழிவுகள் குப்பை தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.
இவற்றை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் அகற்றி வந்தனர். ஆனால் குப்பை கொட்டுவதற்கு தனி இடம் இல்லை எனக் கூறி குப்பைகளை எடுக்க பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வருவது இல்லை.
இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெரும் அறைகள், ஊசி போடும் இடம் அருகே மருத்துவ கழிவுகள் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் தொற்று நோய் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து கமுதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், கமுதி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை அகற்ற முறையாக வருவதில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு மருத்துவமனை மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி துப்புரவு பணிகளின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது: கமுதி பேரூராட்சி பகுதியில் குப்பைகளை குவித்து மக்கும், மக்கா குப்பை தரம் பிரிக்க உரிய இடம் இல்லாததால் இடம் தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனால் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பல தெருக்களில் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை. மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளும் கொட்ட முடியாமல் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது, என்றார்.