சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக கூறி பெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா,பெப்சி சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகினர். இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என்று இரு தரப்பும் கலந்தாலோசித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.