30 கடந்தாலே மூட்டு வலி முதுகு வலி துவங்கி 300 பிரச்சனைகள் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றன. ஆனால் 79 வயதில் 179 மெடல்களுடன் இன்னமும் இளமையாக நீச்சல் அடித்து சாதனை புரிந்து வருகிறார் ஆந்திராவை சேர்ந்த வேங்கட சுபலட்சுமி. தனது பேரன் கூப்பிட்ட ஒரு குரலுக்காக நீச்சல் குளத்தில் இறங்கியவர் இன்று வெறும் 15 வருடங்களில் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறார்.‘‘சொந்த ஊர் ஆந்திரா, ஆம்லாபுரம். எனக்கு 62 வயது இருக்கும். குடும்பமா சேர்ந்து ஒரு ரிசார்டுக்கு போயிருந்தோம். அங்கே என்னுடைய பேரன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். என்னையும் வரச் சொல்லி வற்புறுத்தி அழ ஆரம்பிச்சுட்டான். ஆனால் அந்த ரிசார்ட் கட்டுப்பாட்டின்படி நீச்சல் உடை இல்லாமல் குளத்தில் இறங்க முடியாது. அதனால் தயங்கி தயங்கி அன்றைய தினம் முழுக்க அவனை சமாதானம் செய்வதிலேயே போயிடுச்சு. அப்படி ஆரம்பித்தது தான் இந்த பயணம்” தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வேங்கட சுபலட்சுமி. பேரனின் ஆசைக்காக எப்படியாவது அடுத்த முறை அவனுடன் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும் என்பதற்காகவே நீச்சல் உடையை அணிந்து அடிப்படை நீச்சல் பயிற்சி பெற்று இருக்கிறார் வேங்கட சுபலட்சுமி.
‘‘பாட்டி, நீ வரியா இல்லையா? எனக் கேட்டு அழவே ஆரம்பிச்சிட்டான்’’ என்கிறார் வேங்கட சுபலட்சுமி. அவனுக்காக ஆரம்பித்த பயணம். என்னவோ இதுதான் அவருக்கான களமாக அவர் மனதில் தோன்றியிருக்கிறது. வெறும் ஆறு மாதம்தான் நீச்சலில் என்னென்ன வித்தைகள் இருக்கின்றனவோ அத்தனையும் கற்றுத் தேறி இருக்கிறார். பட்டாம்பூச்சி, பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், மற்றும் ப்ரீ ஸ்டைல் வரை அத்தனை நீச்சல் கலைகளையும் கற்றுக்கொண்டு அடுத்து வந்த நாட்களில் தனது பேரனுக்கு ஆச்சரியம் கொடுத்திருக்கிறார் சுபலட்சுமி. அத்துடன் நிற்கவில்லை வேங்கட சுபலட்சுமி. நீச்சல் போட்டிகள், நீச்சல் மாரத்தான், போட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து நடைப்பயிற்சியை துவங்கியவர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், என தடகளப் போட்டிகளிலும் கலந்து கொள்ள துவங்கி அதிலும் பதக்கங்களை ஜெயிக்கத் துவங்கினார். பல நீச்சல் போட்டிகள், தடகளப் போட்டிகள் என ஐந்து சர்வதேசப் போட்டிகள் உட்பட தேசிய மாநில அளவிலும் பல போட்டி களில் கலந்துகொண்டு தற்போது பதக்கங்களாகவும் சான்றிதழ்களாகவும் 179 சாதனைகளை முடித்திருக்கிறார் வெங்கட சுபலட்சுமி. இந்தியாவை முன்னிறுத்தி நடக்கும் அத்தனை பெண்களுக்கான சர்வதேச விழிப்புணர்வு கூட்டங்கள், சந்திப்புகள், தன்னம்பிக்கை வகுப்புகள் என அனைத்திலும் சிறப்பு விருந்தினர் இப்போது வெங்கட சுபலட்சுமி தான். ஒரு காலத்தில் கணவர் ‘வயது 60 ஆகுது நடக்கவாவது முயற்சி செய்’ இப்படி கூப்பிட்ட குரலுக்கு நாளைக்கு என பதில் சொல்லிக் கொண்டிருந்தவர் இன்று பல மைல்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
‘‘குடும்பம், குழந்தைகள், வேலை என வாழ்க்கை முழுக்க பிஸியா இருந்தேன். இது இப்போது எனக்கான நேரம்.வயது என்பது வெறும் எண்ணிக்கை தான். அது உடலால் மட்டுமே அதிகரிக்குமே தவிர மனதால் கிடையாது. எதற்கும் காரணம் சொல்லாமல் தாமதிக்காமல் எந்த வயதிலும் எதையும் துவங்கலாம். புதிதாக எந்த பயிற்சி எடுத்துக் கொள்ளவும் தயங்காதீர்கள். உங்களின் உந்து சக்தி நீங்கள் மட்டும்தான். 70 கடந்த என்னாலேயே முடியும் என்கையில் உங்களால் முடியாதா?!” தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் பேசுகிறார் வேங்கட
சுபலட்சுமி.
– ஷாலினி நியூட்டன்