ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், இந்தியா முதல் முறையாக 70க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. 2018ல் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடந்த தொடரில் இந்தியா 70 பதக்கங்களை குவித்ததே நமது அணியின் அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது. தற்போது சீனாவில் நடந்து வரும் தொடரின் 11வது நாள் முடிவில் இந்தியா 69 பதக்கங்களை வென்றிருந்தது. 12வது நாளான நேற்று 35கிலோ மீட்டர் கலப்பு நடையோட்டத்தில் இந்தியாவின் மஞ்சு ராணி, ராம் பாபு வெண்கலம் வென்றனர். அதன் மூலம் ஜகார்தாவில் படைத்த சாதனை சமன் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய இணை ஜோதி சுரேகா, ஓஜஸ் டியோடல் தங்கம் வென்றதும், பதக்க வேட்டையில் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தியது. அதுமட்டுமல்ல இதுவரை இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையும் இந்தமுறை அதிகரித்து வருகிறது. நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 81 பதக்கங்களுடன் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.