அம்பத்தூர்: அம்பத்தூர் ஐசிஎப் காலனியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ராஜேஷ் (23), கடந்த 30ம் தேதி மாயமான நிலையில், அயப்பாக்கம் ஏரியில் சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், அயப்பாக்கம் ஏரிக்கரையில் ராஜேஷ் மது அருந்தியபோது, அங்கு வந்த முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மூர்த்தி, நான் கொடுக்கும் கஞ்சாவை அம்பத்தூர் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களிடம் விற்று பணம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு, ராஜேஷ் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை அடித்து கொன்று, ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மூர்த்தி (32), அம்பத்தூரை சேர்ந்த சிவகுமார் (23), சரவணன் (27), ஆவடியை சேர்ந்த நந்தகுமார் (22), பாடி குப்பத்தை சேர்ந்த சுஜிஷ் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.