மீனம்பாக்கம்: சென்னை பழைய விமானநிலைய கார்கோ பகுதியில், நடைமேடை 8ல் இருந்து நேற்றிரவு சுமார் 100 டன் சரக்குகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் கேத்தே பசிபிக் கார்கோ விமானம் ஹாங்காங்குக்குப் புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்துவிட்டு, ஓடுபாதையிலேயே அவசரமாக சரக்கு விமானத்தை நிறுத்திவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஓடுபாதையில் நின்றிருந்த சரக்கு விமானத்தை இழுவை வாகனம் மூலமாக கொண்டு வந்து, மீண்டும் நடைமேடை 8ல் நிறுத்தப்பட்டது. பின்னர், கேத்தே பசிபிக் சரக்கு விமானத்துக்குள் பொறியாளர்கள் ஏறி, இயந்திர கோளாறுகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகள் சுமார் 2 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. பின்னர், அந்த கார்கோ விமானம் நேற்றிரவு 10 மணியளவில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து ஹாங்காங்குக்குப் புறப்பட்டு சென்றது.