சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக டெல்லி செல்ல வேண்டிய 147 பயணிகள் காலை 10 மணி முதல் காத்திருந்தனர். டெல்லி செல்ல காத்திருந்த அனைத்து பயணிகளையும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை காலை 10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. இதில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்நிலையில் பயணிகள், காலை 8.30 மணி முதலே விமான நிலையத்திற்கு வந்து சோதனை நிறைவு செய்து விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்த பின்னர் தான் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பயணிகளை ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து 12 மணியளவில் விமான கோளாறு இன்னும் சரிசெய்யப்படவில்லை என ஏர் இந்தியா விமானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேலாக விமான புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் சில பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர்.
காலை சுமார் 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிகளை காக்கவைக்கப்பட்ட சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.