சென்னை: ஈஞ்சம்பாக்கம் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறால் 120 அடி உயரத்தில் 3 மணி நேரம் அந்தரத்தில் தொங்கிய மக்கள் கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி பொழுதுபோக்கு மையம் உள்ளது. இதில் மேலும் கீழுமாக செல்லும் ‘டாப் கன் ரைடு’ என்ற ராட்சத ராட்டினம் உள்ளது.
இந்த ராட்டினத்தில் மேல் வரிசையில் 15 பேர், கீழ் வரிசையில் 15 பேர் என மொத்தம் 30 பேர் பயணிக்க முடியும். நேற்று மாலை 8 சிறுவர்கள், 10 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் ராட்டினத்தில் ஏறினர். மாலை 7 மணியளவில் மேலே சென்ற ராட்டினம் தொழில்நுட்ப கோளாறால் அங்கேயே தடைபட்டு நின்றது. இதனால் 120 அடி உயரத்தில் 30 பேரும் அந்தரத்தில் சிக்கிக் கொண்டு கதறினர். இதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களும் பீதியடைந்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு சரியாகவில்லை. இதைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீலாங்கரை போலீசாரும் துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ராட்சத கிரேன் மூலம் பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. தீயணைப்பு துறையின் ராட்சத ஏணி மூலம் 3 மணி நேரத்துக்கு பின் ராட்டினத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.