*அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே நேதாஜி நகரில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி- ஆலங்காயம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நேதாஜி நகர் தர்கா வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் வணிக கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி இரவு நேரத்தில் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதியில் கழிவுகளை வீசி செல்லும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அறிவிப்பு பதாகை வைத்து குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்‘, சமூக ஆர்வலர்களும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.