லண்டன்: MVA-BN என்ற குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படக்கூடிய எம்பாக்ஸ் எனும் குரங்கம்மை நோய் தொற்று கடந்த 2022ல் 116 நாடுகளுக்கு பரவி 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நோய் தொற்று கடந்த மாதம் மீண்டும் ஆப்ரிக்காவை தாண்டி பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இதனால், 2022க்குப் பிறகு 2வது முறையாக பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தி உலக நாடுகளை எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தியாவில் எம்பாக்ஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், MVA-BN என்ற தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கியது.தடுப்பூசி, நோய் சிகிச்சை மற்றும் மருந்து என மருத்துவ தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன், போன்றவற்றை மதிப்பிடுவதற்கான வழிமுறையே அவசர கால ஒப்புதலாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மருத்துவ தயாரிப்புகளை பயன்பாட்டில் விடுவதற்காக அவசர கால ஒப்புதல் வழங்கப்படும்.
Bavarian Nordic A/S என்ற நிறுவனம் குரங்கம்மை தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், இதை ஆய்வுக்கு உட்படுத்தி சோதித்துள்ளது.