திருவள்ளூர்: கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,84,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று 6ம் தேதி தொடங்குகிறது. இம்முகாம் வருகின்ற டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சியில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்து முகாம் நடைபெற்றது.
மண்டல இணை இயக்குனர் செய்த்தூன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர், வெங்கடேசன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர்கள் செந்தில்நாதன், சிவஞானம், கால்நடை மருத்துவர் சரவணன், ஆவின் மேலாளர் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
இதில் கால்நடை மருத்துவர்கள் திலகவதி, அனிதா, நாகலட்சுமி, நதியா, அருண்குமார், செல்வப்பிரியா, லோகேஷ், ராஜ்குமார், கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி மருத்துவர் அமுதன், பயிற்சி மருத்துவர் உமாபதி, கால்நடை ஆய்வாளர்கள் தயாளன், லட்சுமி, தாட்சாயணி ஆய்வுக்கூட தொழில்நுட்பர் சரண்யா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராதா, ராஜேஸ்வரி, கஸ்தூரி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.