சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி மதிமுகவை எம்எல்ஏ ரகுராமன், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட உள்ளது. இப்பணியை தொடங்கி வைக்க நேற்று முன்தினம் சென்றார். அப்போது, ‘அது அருந்ததியர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட இடம். வேறு இடம் பார்த்து பணியை தொடங்க வேண்டும்’’ என்று மக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக எம்எல்ஏ தரப்பிற்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக ரகுராமன் எம்எல்ஏ வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விஜயகரிசல்குளம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில்‘‘எங்கள் ஊருக்கு வந்து பொதுமக்களை தரக்குறைவாக பேசிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகார் மனு அளித்தனர்.
இதனிடையே விஜயகரிசல்குளத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் பூமி பூஜைக்கு சென்றுவிட்டு திரும்பி காரில் வரும்போது, அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் தற்போது வெம்பக்கோட்டை வர்த்தக அணி அமைப்பாளருமான அடைக்கலம் என்பவர், தனது காரை மறித்து கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரகுராமன் எம்எல்ஏ வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் வெம்பக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் நம்பிராஜனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, சாத்தூர் டிஎஸ்பி அலுவலகம் முன்பாக ரகுராமன் எம்எல்ஏ நேற்று கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.