திருவாரூர்: மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக உள்ள இவர், புதிய பஸ் நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இவருக்கு சொந்தமான திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் உள்ள இடத்தில் இயங்கி வந்த காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் அருள்பிரகாஷ் இடம் அருகே சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத்பட்டறை நடத்தி வந்தார். இவர் 2 மாதத்துக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த பட்டறையை அவரது மகனான பி.இ மூன்றாம் ஆண்டு மாணவர் ஸ்ரீராம் (20) நடத்தி வருகிறார். இவருக்கும், தீபம் மோகனுக்கும் இடையே இடத்தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக ஸ்ரீராமுக்கும், அருள்பிரகாசுக்கும் நேற்றுமுன்தினம் மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராம், அவரது பெரியப்பா மகன் விக்னேஸ்வரன்(28) மற்றும் சிலர் சேர்ந்து அருள்பிரகாசை செங்கல்லால் காதோடு சேர்த்து தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அருள்பிரகாஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீராம், விக்னேஸ்வரனை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.