சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார்,மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த சரோஜா அம்மையாரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எம்.கே. மோகன், திரு. கே. சின்னப்பா, திரு. எம். பூமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் திரு. நே. சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது சகோதரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தவர் அண்ணன் வைகோ ஆவார். தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை இழந்து தவிக்கும் வைகோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.