திருச்சி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீர் வழங்காத கர்நாடக அரசு மற்றும் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளர் ரொகையா மாலிக், மணவை தமிழ் மாணிக்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து துரை வைகோ அளித்த பேட்டி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகியது. இதனால் உரிய இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
கர்நாடகாவிடமிருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்ட ரீதியாக பல்வேறு முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நமது முயற்சிக்கான எந்த பலனையும் கர்நாடக அரசு வழங்காமல் இருக்கிறது. எனவே உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவை தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நமக்கு ஒதுக்கப்படும் இடத்தில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.