சென்னை: எம்.சி.ஏ.டி திட்டத்தின் கீழ் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீருக்கான கட்டணம் விதிக்கப்படாது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாய் திட்டத்தின் கீழ் வர கூடிய கட்டளை பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை நவீனமயமாக்குதல் என்ற (எம்சிஏடி) திட்டத்துடன் தொடர்புடைய அம்சம் குறித்து செய்தி வந்துள்ளன.
நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், நீர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக அழுத்தப்பட்ட குழாய் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பொருட்களின் இணைய சாதனங்கள், எஸ்சிஏடிஏ அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முன்னோடி திட்டத்தின் கீழ், நீர் பயன்பாட்டிற்காக விவசாயிகள் மீது பயன்பாட்டுக் கட்டணங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை.
இது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சமீபத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது, இந்த விஷயம் ஊடகத்தினரால் பலமுறை எழுப்பப்பட்டது. இது குறித்து ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெளிவுபடுத்தினார். மேலும், ‘விவசாயம்’ மற்றும் ‘நீர்’ இரண்டும் இந்திய அரசியலமைப்பின் கீழ் மாநிலப் பிரிவுகள் ஆகும். அதன்படி, நீர் பயனர் சங்கங்கள் அல்லது இந்த திட்டத்தின் பயனாளிகளிடமிருந்து பயனர் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அந்தந்த மாநில அரசுகளிடம் மட்டுமே இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.