சாங்கிலி: மகாராஷ்டிராவில் சினிமா பார்க்க அழைத்து சென்று எம்பிபிஎஸ் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 2 சக வகுப்பு நண்பர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வரும் 22 வயது மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் தனது இரண்டு வகுப்பு தோழர்கள் மற்றும் அவர்களது நண்பர் ஒருவருடன் திரைப்படம் பார்க்க சென்றனர். அதற்கு முன்னதாக ஒரு குடியிருப்புக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை கொடுத்தனர். அந்த குளிர்பானத்தை மாணவி அருந்திய பின்னர் அவர் மயக்கமடைந்தார். பின்னர் மதுவை குடித்துவிட்டு புல் போதையில் இருந்த மூன்று பேரும், அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அதிர்ச்சியடைந்தார். அப்போது மூன்று பேரும், ‘நடந்த விசயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு மூன்று பேரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ஒரு சில நாட்கள் வெளியே சொல்லவில்லை. கடைசியாக கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், கடந்த 21ம் தேதி விஸ்ரம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, புனே, சோலாபூர், சாங்கிலியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுடைய மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தோம். சாங்கிலி நீதிமன்றம், மூவரையும் வரும் 27ம் தேதி வரை காவல் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவியை சம்பவம் நடந்த நாளில் மாலை 10 மணியளவில் திரைப்படம் பார்க்க அழைத்து சென்றனர். தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்களின் பேச்சை கேட்டு அவர்களுடன் மாணவி சென்றார்.
தனது வகுப்பு தோழர்களின் நண்பன் ஒருவரும் அவர்களுடன் சென்றார். திரையரங்கிற்கு செல்வதற்கு முன்பாக, அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புக்கு சென்றுவிட்டு சினிமா பார்க்க செல்லலாம் என்று கூறி அங்கு அழைத்து சென்றனர். அப்போது குளிர்பானத்தில் மாணவிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.