மதுரை: புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மாணவர் மதுரை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் அருகே மூலக்குளத்தை சேர்ந்தவர் குமரகுரு மகன் முகேஷ்குமார் (20). புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் ஒரு பாடத்தில் முகேஷ்குமார் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர் முகேஷ்குமாருக்கு அறிவுரை வழங்கி, செல்போன் பயன்படுத்தியதால் தான் மதிப்பெண் குறைந்தது என சுட்டிக்காட்டி, அதனை திரும்ப பெற்றுக் கொண்டதுடன், மீண்டும் கல்லூரி சென்று படிப்பைத் தொடருமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு முகேஷ்குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.
இதற்கிடையே, மதுரை வந்த முகேஷ்குமார், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். வாடகை தொகையை பெறுவதற்காக நேற்று காலை ஊழியர்கள் அவரது அறை கதவை தட்டினர். ஆனால் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது முகேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திடீர் நகர் போலீசார் விசாரித்து, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.