சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று முன் தினம் ஆன்லைனில் தொடங்கியது. இந்த பொது பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 7.5% உள் ஒதுக்கீட்டில் வரும் அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
மொத்தம் உள்ள 866 மருத்துவ இடங்களுக்கு 1200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 624 இடங்கள் இருந்தது. அதில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 128 இடங்களும் நிரப்பப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளி பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 212 இடங்களும். பிடிஎஸ் படிப்பிற்கு 11 இடங்களும் நிரப்பப்பட்டது. இதற்கு 133 மாணவர்கள் மட்டுமே தகுதிப்பெற்று இருந்ததால் மீதி இடங்கள் பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கு 10 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 1 இடமும், விளையாட்டுப் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 7 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 1 இடமும் நிரப்பப்பட்டது. கலந்தாய்வு முடிந்து கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு 29ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணையும், 30ம் தேதி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படும். இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
* மகப்பேறு மருத்துவராவதே இலக்கு, 7.5% இடஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்த ரூபிகா பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து முடித்தேன். அதற்கு பிறகு முதல்முறையாக நீட் தேர்வு எழுதினேன். அதில் பெற்ற மதிப்பெண் குறைவாக இருந்ததால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டையில் உள்ள அரசு நடத்தும் பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக தீவிரமாக படித்தேன். இதன் விளைவாக 669 மதிப்பெண்கள் பெற்றேன். அரசு பள்ளியில் படித்ததால் 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளேன். நான் வசிக்கும் கிராமத்தில் பெரிய வசதிகள் எதுவும் இல்லை. அதனால் மகப்பேறு மருத்துவர் ஆக வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக உள்ளது. என் தந்தை மேஸ்திரி பணிதான் செய்து வருகிறார். என்னைப் போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மிகவும் உதவியாக உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.