சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது.
இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவு கடந்த 26ம் தேதி வெளியானது. முதலில் தேர்வு முடிவு வெளியானதன் அடிப்படையில் கலந்தாய்வு தொடங்கப்பட்டிருந்தால், இந்த நேரத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால் முறைகேடு, புகார்கள் காரணமாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தாமதமாக தொடங்குகிறது.
அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தப்படக் கூடிய கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், கலந்தாய்வு 14ம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. அறிவிப்பு வெளியான நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தொடங்குகிறது.
இதற்கு https://tnmedicalselection.net/, https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 8ம் தேதி (வியாழக்கிழமை) என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும், கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கிய ஒரு வாரத்தில், தமிழ்நாட்டிலும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும், அதாவது 21ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.