சென்னை: நடப்பு கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் மாநில அளவில் 10 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த மாணவர் ரஜனீஷ் 720 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் 2024 -2025 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முன்னிட்டு அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் கடந்த மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை பெறப்பட்டன.
அதன்படி 43,063 விண்ணப்பங்கள் வந்தன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 2721 அதிகம். இதில் 7.5% அரசு பள்ளிமாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3733 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 343 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 455 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 133 விண்ணப்பங்களும் வந்தன.
இதையடுத்து, பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த பட்டியல்களை சுகாதாரத்துறை ்அமைச்சர் மா.சுப்பிரணியன் வெளியிட்டார்.
2024-2025ம்ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவர அடிப்படையில், அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதிமருத்துவக் கல்லூரிகளில் 6630 MBBS இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 1683. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 29,429. ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் 28,819. அதில் மாணவர்கள் 10704, மாணவியர் 18114 பேர்.
2024-2025ம் ஆண்டிற்கான 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களின் அடிப்படையில், அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 496 MBBS இடங்கள் உள்ளன.
அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 126 BDS இடங்கள் உள்ளன. மாணவர்களிடம் இருந்து 3733 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 3683 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 1041, மாணவியர் 2642 பேர்.
2024-2025ம்ஆண்டிற்கான சுயநிதி மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (Management Quota) மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களின் அடிப்படையில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1719 MBBS இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகளில் 430 BDS இடங்கள் உள்ளன.
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 13618. ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 13417 பேர் தகுதியுடையவர்கள். அவர்களில் மாணவர்கள் 4662 பேர், மாணவியர் 8755 பேர்.மேற்கண்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் 10 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த மாணவர் ரஜனீஷ் 720 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் சையத் ஆரிபின் 715 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், சென்னை கோடம்பாக்கம் மாணவி ஷைலஜா 715 புள்ளிகள் பெற்று 3ம் இடமும், ராமநாதபுரம் ராம் 715 புள்ளிகள் பெற்று 4ம் இடத்திலும், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மாணவி ஜெயதி பூர்வஜா 715 புள்ளிகள் பெற்று 5ம் இடமும், திருச்செங்கோடு மாணவர் ரோகித் 715 புள்ளிகள் பெற்று 6ம் இடமும், மோகனூர் பகுதியை சேர்ந்த மாணவர் சபரீசன் 715 புள்ளிகள் பெற்று 7ம் இடமும், சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த மாணவி ரோஷிணி சுப்ரமணியன் 715 மதிப்பெண்கள் பெற்று 8ம் இடமும், நாமக்கல் கருப்பட்டிப் பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் 715 புள்ளிகள் பெற்று 9ம் இடமும், கோவை பகுதியை சேர்ந்த விஜய்கிருத்திக் சசிகுமார் 710 புள்ளிகள் பெற்று 10ம் இடமும் பிடித்துள்ளனர்.
7.5% இடஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்த 10 பேர்
அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 10 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். அதன்படி, ஊத்தங்கரை மாணவி ரூபிகா 669 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தாரமங்கலம் மாணவி காயத்திரிதேவி 668 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடியை சேர்ந்த மாணவி அனுஷியா 665 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும், நாமக்கல் மாவட்டம் மரூர்பட்டியை சேர்ந்த மாணவர் ரித்தீஷ் 665 புள்ளிகள் பெற்று நான்காம் இடமும், கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர் அன்பரசு 662 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடமும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த மாணவி பூஜா 660 புள்ளிகள் பெற்று 6ம் இடமும், தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் கிராமத்தை சேர்ந்த மாணவி மகாலட்சுமி 659 புள்ளிகள் பெற்று 7ம் இடமும், சேலம் மாவட்டம் நரியனூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் மணிசங்கர் 658 புள்ளிகள் பெற்று 8ம் இடமும், செய்யார் அடுத்த வடதின்னலூர் கிராமத்தை சேர்ந்த மோனிகா 658 புள்ளிகள் பெற்று 9ம் இடமும், தூத்துக்குடி அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் நந்தகோகுல் 641 புள்ளிகள் பெற்று 10ம் இடமும் பெற்றுள்ளனர்.
* கலந்தாய்வு எப்போது?
தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 21ம் தேதி இணையதளத்தில் தொடங்க உள்ளது. 22ம் தேதி சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு நேரடியாக கவுன்சலிங் நடைபெற உள்ளது. திருநங்கை ஒருவருக்கு அரசு சார்பில் மருத்துவ இடம் கிடைக்கிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கை பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர்கிறது. நேற்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கலைஞரின் நூறு ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன் தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை மேடையில் வலியுறுத்தி இருக்கிறார்.