சென்னை: மேயர் பிரியா தலைமையில் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (04.06.2025) நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப் (Washlab), சியர் (Cheer) மற்றும் ரீசைக்கிள் பின் (Recycle Bin) அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 மேயர் ஆர். பிரியா அவர்கள் தலைமையில் இன்று (04.06.2025) ரிப்பன் கட்டட வளாகம், அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் மேயர் அவர்கள் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0க்கான இலச்சினையினை வெளியிட்டார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளியினை சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் என கழிப்பிடமாகப் பயன்படுத்தும் இடங்களைக் கண்டறிந்து வரைபடமாக்குதல், விழிப்புணர்வுப் பிரச்சாரம் (#OnceinAloo), கழிவறைகளைத் தத்தெடுத்தல் மற்றும் அமைத்துத் தருதல் (Adopt a Toilet / Donate a Toilet), கழிப்பறைகளைப் பராமரிக்க பொதுமக்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார்.
ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் மூலம் கழிப்பறை பற்றிய உரையாடல்கள் சென்னை மாநகரம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தின் மாற்றத்திற்காக கழிப்பறைகள் பற்றி பல கோணங்களில் பேசி, விவாதித்து, மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பினை உருவாக்க ஏதுவாக, இந்நிகழ்வில் பங்கேற்க ஊடகத்தினர், கல்வி நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.