சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு இலட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் நிகழ்வினைத் தொடங்கி வைக்கும் விதமாக, மேயர் ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், ஒரு இலட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைக்கும் விதமாக, மேயர் ஆர்.பிரியா அவர்கள் இன்று (05.06.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு இலட்சம் நாட்டுரக மரக்கன்றுகள் நடும் பணியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரை 12,175 மரக்கன்று நடவு செய்வதற்கான வாகனத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில், ஒரு இலட்சம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, முன்னோட்டமாக மணலி மண்டலத்தில் 10 அடி உயரம் கொண்ட 250 மகிழம் மரக்கன்றுகளை நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
நன்கு வளர்ந்த நாட்டுரக மரக்கன்றுகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்கள் 1 முதல் 15 வரை பூங்காக்கள், திறந்தவெளி நிலங்கள், சாலையோரம் குளம், ஏரிக்கரை போன்ற இடங்களில் நடவு செய்யப்படவுள்ளது. இதில் ஆலமரம், அரசமரம், பூவரசம், செண்பகம், சிவப்பு சாண்டர், வில்வம், நீர் மருது, இளுப்பை, நாவல், பலா, காரி பலா, புங்கன், அத்தி, ரோஸ்வுட், புன்னை, மகாகோனி, மகிழம், மலை வேம்பு, நெல்லிக்காய் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
பின்னர், தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி, மீள்பயன்பாடு மேற்கொள்ளும் ஒரு மாபெரும் முன்னெடுப்பில், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரிப்பன் கட்டட வளாகத்தில் தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் குப்பைகள் சேகரிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டார்.