மேயர் பிரியா அண்ணாநகர் மண்டலம், வார்டு-106, எம். எம். டி. ஏ. காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத்திறந்து வைத்தார். மேயர் பிரியா இன்று (13.03.3025) அண்ணாநகர் மண்டலம், வார்டு-106, எம். எம். டி. ஏ. காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெருநகர சென்னை மாநகராட்சியில் 2021 ஆம் ஆண்டு “மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியும், சுற்றுச்சுழல் துறையும் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் மஞ்சப்பை என்ற தானியங்கி விற்பனை இயந்திரம் (Vending Machine) வைத்திருக்கிறோம். இதன் மூலமாக, மார்க்கெட் பகுதிகளில் இருக்ககூடிய பொதுமக்களோ, வியாபாரிகளோ, மஞ்சப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 இயந்திரங்கள் பொறுத்தப்பட்டிருந்தது, இன்றைக்கு இரண்டாம் கட்டமாக 17 இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு இருக்கிறது பொதுமக்கள் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கடந்த நிதிநிலை அறிக்கையில் 50 ஆயிரம் மஞ்சப் பைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதத்திலேயே 50 ஆயிரம் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மக்களுக்கு மஞ்சப்பை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே பத்து இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும் போது மஞ்சப்பையை எடுத்து வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் துணிப்பையானது தொடர்ந்து 15 முறையாவது பயன்படுத்த முடியும். அதே சமயம் பிளாஸ்டிக் பைகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படுகிறது. மேலும் சிலரால் நீர்வழிக் கால்வாய்களில் தூக்கி எறியப்படுகிறது இதன் காரணமாக கால்வாய்களில் வெள்ளநீர் செல்வதற்கு தடை ஏற்படுகிறது. மேலும் தரையில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு நீண்ட காலம் பிடிப்பதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அடுத்த தலைமுறையினரை காக்கின்ற வகையில் மஞ்சப்பை பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் தமிழில் பெயர் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.மோகன், மத்திய வட்டார துணை ஆணையர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் திரு.நே.சிற்றரசு (பணிகள்), டாக்டர் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), மண்டலக்குழுத் தலைவர் திரு.கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர் திரு.அதியமான் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.