தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்கும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலான நாய் பிடிக்கும் வாகனத்தை தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான இடங்களாக கண்டறியப்பட்ட 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அப்பகுதிகள் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள எல்இடி தெருவிளக்குகள், தூய்மைப்பணி கண்காணிக்கப்படும். இந்த மையத்தில் தாம்பரத்தின் குரல் என்ற செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிப்பதற்கு தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி ஆணையர் தலைமையில் தொடங்கி வைத்திருக்கிறோம். தூய்மை பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தெருவாரியாக ஒரு க்யூஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லா பணிகளையும் ஜிபிஎஸ் ட்ராக்கர் மூலமாக கண்காணிக்க முடியும். இதுதவிர மழை மற்றும் வெள்ள நாட்களில் பாதிப்பு அடையக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார்கள் மூலமாக அதனை கண்காணிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும், தெரு விளக்குகள் சரியான வகைகளில் எரிகின்றனவா என தொடர்ந்து கண்காணிப்பதற்கான செயல்பாடுகளும் இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த செயலியில் மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்து மக்கள் கையில் கொண்டு சேர்ப்பதற்காகவும் அந்த செயலியின் செயல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான பணிகளும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக் குழுத் தலைவர்கள் டி.காமராஜ், வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.