செம்பனார்கோயில்: மயிலாடுதுறை அருகே படிக்கும் போதே கைவினை பொருட்கள் தயாரித்து சகோதரிகள் அசத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராமமூர்த்தி- அருள்மங்கை தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அக்க்ஷயா, மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டும், மூன்றாவது மகள் யுவஸ்ரீ அரசு பள்ளியில் பிளஸ்-1ம் படித்து வருகின்றனர்.
இதில் யுவஸ்ரீ சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது கொண்ட அதீத காதலால் எந்த ஓவிய பயிற்சியும் எடுக்காமலே தத்ரூபமாக காண்பதை அப்படியே வரையக்கூடிய திறமை படைத்தவர். கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்ல முடியாத சூழலில் அதிக அளவு ஓவியங்கள் வரைந்து வந்தார். இதனை பார்த்த அவரது சகோதரி அக்க்ஷயா, தானும் ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வத்தில் சகோதரியிடம் போட்டி போட்டு கொண்டு ஓவியம் வரைய தொடங்கியுள்ளார்.
ஓவியத்தோடு நிறுத்திவிடாமல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டைகளை கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யலாம் என முடிவு செய்து சகோதரிகள் இணைந்து கைவினைப் பொருட்கள் செய்ய தொடங்கினர். நாளடைவில் முட்டை ஓடுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.பின்னர் மேசையில் அலங்காரத்திற்கு வைக்கக்கூடிய பொருள், தண்ணீர் அருந்துவதற்கான கப் உள்ளிட்டவற்றை தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். தொடர்ந்து சிறிய ரக ஆஷா பிளேடு மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி எந்தவித இயந்திரத்தின் உதவியும் இன்றி தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருட்களை செய்ய துவங்கியுள்ளனர்.
கைவினை பொருட்கள் செய்து மீதமான தேங்காய் சிரட்டைகளை எரித்து அதில் வரும் கறி துகள்களை பயன்படுத்தி தத்ரூபமாக யுவஸ்ரீ ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.இதில் இருவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். பலரும் இவர்களது ஓவியம் மற்றும் கைவினை பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் வருகின்றனர்.இதுகுறித்து சகோதரிகள் கூறுகையில், இருவரும் படித்துக்கொண்டே கிடைக்கும் நேரங்களில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தேனீர் கோப்பை , அழகு சாதன பொருள் , தண்ணீர் கப் மற்றும் கிண்ணம் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறோம்.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பிட்ட அளவிலான தொகையை படிக்கும் வயதிலேயே ஈட்டி வருவதால் அந்த தொகையை தங்களது கல்வி செலவுக்கும், ஓவியங்கள் வரைவதற்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இதுபோன்று வித்தியாசமான கைவினைப் பொருட்களை செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். தேங்காய் சிரட்டைகளை கொண்டு கைவினை பொருட்கள் செய்வதற்கான தொழில் தொடங்குவதற்கு அரசு உதவிட வேண்டும் என்றனர்.