கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த குன்னம் ஊராட்சி பெரம்பூரில் வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் ஒரு ஆல மரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் அதிகளவில் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் விளைநிலங்களில் வவ்வால்கள் இடும் எச்சங்கள் உரங்களாக பயன்படுகிறது. எனவே இந்த வவ்வால்களை அப்பகுதி கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். விவசாயிகளின் நண்பனாக காலம் காலமாக இப்பகுதியில் வவ்வால்கள் போற்றப்படுகிறது. மேலும் இந்த வவ்வால்கள் தங்கியுள்ள பகுதி வவ்வால் அடி என்று அழைக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்த ஆலமரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. இதனால் வவ்வால்கள், பறவைகள் பறந்து சென்று விடக்கூடாது என்பதற்காக காலம் காலமாக இந்த பகுதியில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழந்தின்னி வவ்வால்கள் விவசாயத்துக்கு உதவுகிறது. எனவே அவற்ற காக்க பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை என்றனர்.