செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், தற்போது சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள், தங்கள் நிலத்தை உழுது சம்பா நடவு பணியை விரைந்து செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், குறுவை அறுவடை முடிந்த வயலில் கடந்த மாதத்தில் இருந்து சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக பம்புசெட் மூலம் வயலில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை நன்கு உழுது, வயலை விதைப்புக்கு பக்குவப்படுத்தினோம்.
பின்னர் பிபிடி கோ- 46, கோ- 50 போன்ற நெல் ரகங்களை வயலில் விதை விட்டு பாய் நாற்றங்கால் தயார் செய்தோம். தற்போது நாற்றுகளை பறித்து நடவு செய்து வருகிறோம். இதை தொடர்ந்து அறுவடைக்கு தயாராகும் வரை சம்பா நெல்லை பராமரிப்போம். மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாமல் சம்பா விதைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் சம்பா சாகுபடியில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி சம்பா, தாளடி சாகுபடி குறித்து கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 346 ஏக்கர் (65,687 ஹெக்டேர்) பரப்பளவில் நடப்பு ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் போதிய அளவிற்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்சமயம், மயிலாடுதுறை மாவட்டத்தில் யூரியா 759 மெட்ரிக் டன்னும், டிஏபி 344 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 651 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 449 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
இந்நிலையில் சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா உரங்கள், உர நிறுவனங்களிலிருந்து 2900 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2700 மெட்ரிக் டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் ஆகக் கூடுதல் 5600 மெட்ரிக்டன் யூரியா, நவம்பர் மாதம் வழங்கல் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்பிக் நிறுவனத்திலிருந்து 330 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 06.11.2024 அன்று இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ்; பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 334.125 மெட்ரிக் டன் 07.11.2024 அன்று அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் உரம் வாங்கச்செல்லும் போது தங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள விற்பனை மையங்களை அணுகி விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை பெற்று பயன் பெறலாம், தனியார் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு உரத்தினை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.