*விவசாயிகள் மும்முரம்
சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, குத்தாலம், மயிலாடுதுறை, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், கீழையூர், கொள்ளிடம், திருவெண்காடு, மங்கைமடம், வைத்தீஸ்வரன் கோயில், ஆதமங்கலம், கதிராமங்கலம், திருநகரி, நெப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு விவசாயிகள் சுமார் 95 ஆயிரம் ஏக்கரில் பம்பு செட் மோட்டார் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடிகளை தொடங்கியுள்ளனர். தற்போது பெரும்பாலான இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் வயல்களை சீர் செய்து விதை விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடைகாலத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவுப் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனர். சில இடங்களில் நடவு செய்த நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்துள்ளதாக தெரிகிறது.
மீதமுள்ள 40 ஆயிரம் ஏக்கரில் இன்னும் ஓரிரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு குறுவை சாகுபடியை நல்ல முறையில் செய்து முடிக்க மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.