மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யனாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை நீடிக்கும் மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், 3 நாட்களாக நீரில் மூழ்கிய விளை நிலங்களை அரசு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் கோரிக்கையை அடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சீர்காழி அருகே நல்லூர் கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். கொள்ளிடம் பகுதியில் மழைநீர் தேங்கிய சம்பா நேரடி விதைப்பு விளை நிலங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். நல்லூர் கிராமத்தில் விளை நிலங்களில் மூழ்கிய பயிர்களை அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் காண்பித்தனர்.
உப்பனாற்றை தூர்வாரவும், காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீட்டிக்கவும், இடுபொருட்களை இலவசமாக வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யனாதன் தெரிவித்தார். மேலும் சீர்காழி -1,088 ஹெக்டேர், கொள்ளிடம் – 1,200 ஹெக்டேர், செம்பனார்கோவில் – 600 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.