*தொல்லியல்துறை ஆய்வு
குத்தாலம் : மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயர சாமி சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. ஐம்பொன் சிலையா? என தொல்லியல்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் கிராமத்தில் பண்டைய காலத்தில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட பாடல்பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சோழ அரசால் கட்டப்பட்ட நடராஜர் சன்னதி உள்ளது. 8.5 அடி உயரம் கொண்ட உலகில் மிகப்பெரிய வடிவமாக பஞ்சலோக நடராஜர் சிலை இக்கோயிலில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள கோயில் குளத்தில் நிர்வாகம் சார்பில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது.
அப்போது குளத்தில் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயரத்தில் 350 கிலோ எடைகொண்ட தலை, கை, கால், இல்லாமல் உடல் மட்டும் உள்ள சிலை ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது. குத்தாலம் தாசில்தார் சத்தியபாமா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு வந்த அதிகாரிகள், சிலையை கைப்பற்றி குத்தாலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொல்லியல்துறை ஆய்விற்கு பின்னரே இந்த சிலை ஐம்பொன் சிலையா? உலோக சிலையா என்று தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.