லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் தனது எக்ஸ் பதிவில் செய்தி சேனல் ஒன்றில் வெளியான வீடியோ காட்சியை இணைத்துள்ளார். இதில் பேசும் மதுரா மாவட்டத்தின் மான்ட் தொகுதி பாஜ எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி, ‘‘மாயாவதி உத்தரப்பிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முதல் முறையாக நாங்கள் தான் அவரை முதல்வராக்கினோம். நாங்கள் அந்த தவறை செய்துவிட்டோம். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தான் ஊழல் மிகுந்த முதல்வர்” என்று கூறுகிறார்.
தனது பதிவில் அகிலேஷ் யாதவ், ‘‘அரசியல் வேறுபாடுகளுக்கு இடமுண்டு. ஆனால் ஒரு பெண்ணாக அவரின் கண்ணியத்தை கெடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவரை முதல்வராக்கியது தவறு என்கிறார்கள். இது ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் கருத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும் அவர் ஊழல் நிறைந்த முதல்வர் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆட்சேபனைக்குரியது. இந்த அறிக்கைக்காக பாஜ எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.