Wednesday, February 12, 2025
Home » மகத்தான லாபம் தரும் மலேசியன் கோவக்காய்!

மகத்தான லாபம் தரும் மலேசியன் கோவக்காய்!

by Porselvi

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட பயிர்கள் விளைவிக்கப்படும். பெரும்பாலான பகுதிகளில் அந்த மண்ணுக்கேற்ற பயிர்களைத்தான் பயிரிடமுடியும். வேறு பயிர்களை சாகுபடி செய்ய முடியாது. பலவிதமான பயிர்களை ஒருசில பகுதிகளில் விளைவிக்கும் சூழல் நிலவும். அத்தகைய பகுதிகளில் ஒன்றுதான் தேனி. இங்கு மற்ற பகுதிகளில் விளையும் காய்கறிப் பயிர்களையும் பயிரிடலாம். காப்பி, மிளகு, ஏலக்காய், திராட்சை போன்ற பயிர்களையும் பயிரிடலாம். இத்தகைய பூமியில் மலேசியன் கோவக்காயைப் பயிரிட்டு அசத்தலான லாபம் பார்த்து வருகிறார் உடையாளி என்ற விவசாயி. தேனி மாவட்டத்தின் அடையாளமான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாடிச்சேரி என்ற கிராமம் பச்சைப் பசேல் என காட்சி அளிக்கிறது. இந்த ஊரில்தான் இருக்கிறது உடையாளியின் கோவக்காய்த் தோட்டம். ராட்சத காற்றாடிகள் (காற்றாலை) சுழன்று பலமான காற்று வீசும் ஒரு இதமான சூழலில் இவரது வயலுக்குச் சென்றோம். கோவக்காய் அறுவடைப் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தவர் நம்மைக் கண்டதும் வரவேற்று, தனது சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு 8 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் ஒரு பகுதியில் கல்பந்தல் அமைத்து புடலை, பாகற்காய், கோவக்காய், அவரைக்காய் ஆகியவற்றை பயிரிட்டு இருக்கிறேன். அதுபோக மலேசியன் கோவக்காயை சாகுபடி செய்திருக்கிறேன். இந்த கோவக்காய்க்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் அதிகப்படியான வரவேற்பு இருக்கிறது. கோவக்காய் கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகிறார்கள். எங்கள் தோட்டத்தில் விளையும் மலேசியன் கோவக்காயானது, மருத்துவக்குணம் கொண்டதாகவும், சைவ உணவில் பொரியல் செய்து சாப்பிட தோதான காயாகவும் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரிய ஓட்டல்களில் சமீபகாலமாக பொரியல் செய்வதற்காக கோவக்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை அதிகரித்து வருகிறது.

கோவக்காய் பயிரிடுவதற்கு முன்பாக கல்பந்தலுக்கு கீழ்ப்பகுதியில் குறுகிய நாள் பயிர்களான வெங்காயம், கொத்தமல்லி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வேன். கோவக்கொடிகள் பந்தலில் ஏறி படர்ந்து பலன் தருவதற்குள் இந்தப் பயிர்களை அறுவடை செய்துவிடலாம். சுருளிப்பட்டி பகுதியில் இருந்து கோவக்காய் பயிரிடுவதற்கான பதியன்களை வாங்கி வருவோம். ஒரு ஏக்கருக்கு 550-600 பதியன்கள் தேவைப்படும். அவற்றை 10க்கு 10 அடி என்ற இடைவெளியில் இரண்டு பதியன்கள் என நடவு செய்வோம். நடவு செய்த 20 நாட்களில் கோவக்காய் கொடி கல்பந்தலில் ஏறி விடும். கொடியை முறையாக பந்தலில் ஏற்றிவிட வேண்டும். கீழே படரவிடக்கூடாது.

60வது நாளில் கோவக்காய்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். அதில் இருந்து வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். மண்ணைப் பாதுகாத்து, மகசூலைப் பெருக்கும் வகையில் வேப்பம் புண்ணாக்கு, டிஏபி மற்றும் வெர்மி கம்போஸ்ட் உள்ளிட்ட உரங்களை இடுகிறோம். ஒரு ஏக்கருக்கு விதைப்பு மற்றும் உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. அறுவடைப் பணியில் தொழிலாளர்களோடு சேர்ந்து நானும், எனது மனைவியும் ஈடுபடுவோம். எங்களிடம் சொந்தமாக உள்ள மினி டிராக்டர்கள் மூலம் நாங்களே நிலத்தில் உழுதல், களைபறித்தல், உரம் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம். டிராக்டர்களை தனியாக வாடகைக்கு பெறாததால், அதற்கான செலவும் எங்களுக்கு மிச்சமாகிறது. மேலும், சொட்டுநீர்ப் பாசனத்திற்காக அரசாங்கம் வழங்கும் மானியமும் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் வாரத்திற்கு 20 முதல் 30 மூட்டைகள் வரை கோவக்காய் பறிக்கப்படுகிறது. ஒரு மூடை கோவக்காய் என்பது 50 கிலோ எடை கொண்டது. தோட்டத்தில் பறிக்கும் கோவக்காய்களை கரைக்கு கொண்டுவந்து தரம் பிரித்து தனி மூடைகளாக கட்டி மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம்.

வாரத்திற்கு 20 முதல் 30 மூட்டை எனும்போது, மாதத்திற்கு குறைந்தபட்சம் 100 மூட்டைகள் வரை கோவக்காய் மகசூல் கிடைக்கிறது. இதில் ஒரு கிலோ கோவக்காய்க்கு ரூ.12 முதல் ரூ.40 வரை விலை கிடைக்கிறது. சீசன் காலங்களில் விலை கூடுதலாகவே கிடைக்கும். சரா சரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.20 வரை விலை கிடைக்கிறது. மாதம் 100 மூட்டை எனும் பட்சத்தில் 5 டன் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வகையில் ஒரு வருடத்திற்கான வருமானம் என்று பார்த்தால் ரூ.12 லட்சம் வரை கிடைக்கிறது.  இதில் தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலி உள்ளிட்ட செலவுகள் போக ஒரு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் பார்க்கலாம்’’ என்கிறார்.

கோவக்காய் விவசாயத்திற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதில்லை. இதனால் கிணற்றுப் பாசனத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் பாய்ச்சப்படுகிறது.கோவக்காய்த் தோட்டத்தை சிறப்பான முறையில் பராமரிக்கும் பட்சத்தில் ஒன்றரை வருடம் வரை காய்கள் பறிக்கலாம். வானிலை உள்ளிட்ட காரணங்கள் கைகொடுக்காவிட்டாலும் ஒரு வருடத்திற்கு மகசூல் பார்க்கலாம்.

 

You may also like

Leave a Comment

5 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi