மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீர் கால்வாயில் சிக்கியிருந்த ஒரு நாய் மாயமானது. மற்ற 4 நாய்கள் இருக்கும் இடத்தில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திரும்பினர். மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் கடந்த 30ம் தேதி 16 கண் மதகுகளில் இருந்து திறந்துவிடப்பட்டது. இதனால் உபரிநிர் கால்வாய் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் திறந்த போது, 16 கண் மதகு அருகேயுள்ள மண் திட்டு பகுதியில் வெவ்வேறு திட்டுகளில் 5 தெருநாய்கள் சிக்கிக்கொண்டன. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், நாய்களுக்கு உணவு வழங்க உத்தரவிட்டது. டிரோன் மூலம் நாய்களுக்கு பிரியாணி மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டு வந்தது. இதுபற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த நாய்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 70,000கன அடியாக குறைந்தது. இதனால், உபரி நீர் கால்வாயில் திறக்கும் நீரின் அளவு விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பின் அளவு குறைந்ததால் நேற்று மதியம் மண் திட்டில் சிக்கியுள்ள 5 நாய்களை மீட்க, மேட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு திட்டில் ஒரு நாய் மட்டுமே இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடி பார்த்தபோது, அந்த நாயை காணவில்லை. நீர் குறைவாக செல்வதால், அந்த நாய் நீந்தி கரை சேர்ந்திருக்கும் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர். மற்ற 4 நாய்கள் இருக்கும் பகுதியில், நீரோட்டம் வேகமாக இருப்பதால், அதனை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தீயணைப்புதுறை வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து அந்த 4 நாய்களுக்கும் ட்ரோன் உதவியுடன் உணவு வழங்கப்பட்டது. நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டால் மட்டுமே, அந்த நாய்களை அங்கிருந்து மீட்க முடியும் என, மேட்டூர் தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.