* 482 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
* பெண் காவலர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த சிறப்பு பயிற்சி
சென்னை: பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த முதல்வருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் முதல்வருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் வாகனத்தில் நின்றபடி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கான விருதுகளை தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், காவல்துறை நிர்வாக பிரிவு ஏடிஜிபி வெங்கட்ராமன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர தயால், போலீஸ் அகாடமி ஐஜி தேன்மொழி, ஐஜி பவானீஸ்வரி, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், நிர்வாகப்பிரிவு ஐஜி அவினாஷ் குமார், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட 69 காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாக விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் 482 பேருக்கு விருதுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்த பெருமையில் தமிழ்நாடு காவல்துறைக்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சி குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கி தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான். காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் காவல் ஆணையத்தை அமைத்தவர் கலைஞர். இரண்டாவது, மூன்றாவது காவல் ஆணையத்தையும் கலைஞர்தான் அமைத்தார். 5வது காவல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் திராவிட மாடல் அரசு அமைத்திருக்கிறது.
காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெற செய்தது கலைஞர்தான். மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்னைகளை தீர்ப்பதில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறை திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
குற்றங்கள் நடக்காத மாநிலமாக, போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக, பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும். குற்றங்கள் எங்கேயும் யாராலும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டனையை பெற்றுத் தந்தாக வேண்டும். இந்த உறுதிமொழியை நான் மட்டும் எடுத்தால் போதாது, காவல்துறையின் உயரதிகாரிகள் மட்டும் எடுத்தால் போதாது, ஒவ்வொரு காவலரும் எடுத்தாக வேண்டும்.
என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை – நடக்க விடமாட்டேன் என்று ஒரு காவலர் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்ஜியத்திற்கு வந்துவிடும். மனித வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க – 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்து காவலர்களும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.