இந்த திட்டத்தை 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டது. மாயனூர் காவிரி கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.6,941 கோடி தேவைப்பட்ட நிலையில், ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 11 கி.மீ. தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் வெட்ட ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின.
கிருஷ்ணராயபுரம்: காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை -குண்டாறு ‘நதிகள் இணைப்பு’ திட்டத்தில் கால்வாய் வெட்டும் முதல் கட்டமாக 4.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100 சதவீத பணிகள் நிறைவடைந்தது, மாயனூர் காவிரியில் கதவணையில் சென்னை ராட்சத கிரேன்கள் மூலம் 220 டன் ஷட்டர்கள் ெபாறுத்தும் பணிகள் நிறைவடைந்தன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, வைகை, பம்பா, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை உள்ளிட்ட ஜீவ நதிகளில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தவும், பாலாறு, தென்பெண்ணை ஆறு, செய்யாறு, குண்டாறு, வெள்ளாறு உள்ளிட்ட வறண்ட நதிகளில் நீரோட்டத்தை ஏற்படுத்தவும், அப்பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் நீர்நிரம்பவும், விவசாய நிலங்கள் சாகுபடி செய்யவும், குடி நீர் தட்டுப்பாட்டை போக்கவும், 1991ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் நதிகள் இணைப்புத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் தாமிரபரணி – கருமேணி ஆறு இணைப்புத் திட்டத்தை, 2009ல் கலைஞர் அறிவித்து, பணிகளை தொடங்கி வைத்தார். அதேபோல், காவிரி-குண்டாறு-வெள்ளாறு இணைப்புத் திட்டமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 262.19 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் மூலம் மூன்று கட்டங்களாக நதிகளை இணைக்கும் பணி தொடங்கியது. அதில், முதல் கட்டமாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் தெற்கு வெள்ளாறுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாளில் இருந்து 109 கிமீ நீளத்திற்கு புதிய பாசனக் கால்வாய்களை உருவாக்கி வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கிமீ நீளத்திற்கு புதிய பாசானக் கால்வாய்களை வெட்டி வைகை ஆறு முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. இதற்கு ரூ.14,400 கொடியில் 262 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்படவுள்ளது. அதில், முதல்கட்ட பணியில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் இருந்து புதுக் கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.5 கி.மீ. தொலைவுக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து வைகை ஆறு வரை 109 கி.மீ. தொலைவுக்கும், 3-ம் கட்டமாக வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக குண்டாறு வரை 34 கி.மீ. தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படும் உள்ளது. இந்த திட்டத்தை 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டது.
மாயனூர் காவிரி கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.6,941 கோடி தேவைப்பட்ட நிலையில், ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 11 கி.மீ. தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் வெட்ட ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி பகுதியிலிருந்து திருக்காம்புலியூர், மேட்டு திருக்காம்புலியூர் கிராமங்கள் வழியாக. 4.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் வெட்ட ரூ. 171 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வாய்க்கால் வெட்டும் பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு இரவு பகலாக பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது. வாய்க்கால் வெட்ட வெட்ட பாறைகள், தோண்ட தோண்ட நீர் ஊற்று என பெரிய சவால்களை சந்தித்து வாய்க்கால் வெட்டப்பட்டது.
இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரியில் 1.05 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு கதவணை கட்டப்பட்டது. இந்த கதவணைக்கு ‘ஷட்டர்கள்’ மட்டும் 220 டன் இரும்பு கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதை, சென்னையிலிருந்து பிரத்தேகமாக வரவழைக்கப்பட்ட ‘ராட்சத கிரேன்’ மூலம் தூக்கி வைத்து, தடுப்பணைகளில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன்மூலம், முதல் கட்டமாக தொடங்கப்பட்ட நதிகள் இணைப்பு திட்டத்தில் 4.1 கிலோ மீட்டர் தூரம் தோண்டப்பட்ட கால்வாய் பணிகள் நூறு சதவீதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில், திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே இருப்பு பாதை கடக்கும் பகுதியில் உள்ள இடங்களில் பாலம் அமைக்க தலா 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாலம் கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விரைவில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, முடித்து, அந்த பகுதியில் கால்வாய்களை இணைத்தால் மட்டுமே நதிகள் இணைப்பு திட்டம் நிறைவு பெறும் எனவே, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களைக் கட்டி முடிக்க வேண்டும் எனவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை நிதி ஒதுக்கிடவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.