சென்னை: வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இது, உலக புகழ் பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக திருக்கொடி ஊர்வலமும், தேர்பவனியும் நடைபெறும். விழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.
இதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் முக்கியமாக வாண வேடிக்கைகள் அனைத்தும் நடைபெறும். இந்நிலையில் மக்கள் செல்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 29ம் தேதி காலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.