மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) 2025 கிரிக்கெட் போட்டியில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டிகள் வரும் 22ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை நடக்கின்றன. இப்போட்டிகளில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள், புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் மோதவுள்ள அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்படுவார்.
இந்திய அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, யூசப் பதான், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷாபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவன் நேகி, குர்கீரன் சிங் மான், அபிமன்யு மிதுன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் மும்பை, ராய்ப்பூர், லக்னோ நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களில் நடைபெறும். இப்போட்டிகளில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. 22ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதவுள்ளன.