Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. அதனுடன் சேலஞ்சர் சாம்பியன்ஷிப் போட்டியும் முதல் முறையாக நடக்கிறது. கடந்த ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (எஸ்டிஏடி) முதல்முறையாக சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. விளையாட்டு உலகின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வரும் சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது தொடர் இன்று முதல் நவ.11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும். மொத்தம் 7 சுற்றுகளாக ரவுண்டு ராபின் முறையில் நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 கிராண்ட் மாஸ்டர்கள் களமிறங்குகின்றனர்.

வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ50 லட்சம் பரிசளிக்கப்பட உள்ளது. முதல் பரிசு ரூ15 லட்சம். அரவிந்த் சிதம்பரம் (தமிழ்நாடு), அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோர் இந்தியா சார்பில் விளையாட உள்ளனர். சாம்பியன் பட்டம் பெறும் வீரருக்கு 24.5 சர்வதேச தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும். சாம்பியன் பட்டத்தை 2 பேர் பகிர்ந்துகொண்டால் இருவருக்கும் தலா 22.3 புள்ளிகள் அளிக்கப்படும். 2வது இடம் பெறுபவருக்கு 17.8 புள்ளி, 3வது இடத்துக்கு 15.6 புள்ளிகள் கிடைக்கும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன், முதல் முறையாக சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற உள்ளது. இதுவும் 7 சுற்றுகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும். இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ20 லட்சம். முதல் பரிசு ரூ6 லட்சம். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு, கார்த்திகேயன் முரளி, பிரணவ் வெங்கடேஷ், பிரணேஷ் முனிரத்தினம் உட்பட இப்போட்டியில் பங்கேற்கும் 8 பேரும் இந்திய வீரர், வீராங்கனைகள். இதில் சாம்பியன் பட்டம் பெறுபவர் அடுத்த ஆண்டு நேரடியாக மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கலாம்.

கட்டணம் 100: இன்று முதல் நவ.11ம் தேதி வரை 8 போட்டியை காண தினமும் பொதுமக்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். போட்டி நடைபெறும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மொத்தம் 1100 இருக்கைகள் உள்ளன. நுழைவுக் கட்டணம் ரூ100, ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலமாக வாங்கலாம். செஸ் அகடமி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம். இலவச அனுமதிச்சீட்டு பெற விரும்பும் அகடமிகள் anshika@mgd.one என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ள வேண்டும்.