சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் முதுகலைத் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திரப் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு அனந்த்பூரிலும், திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கர்னூலிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ரயில்கள் எதிலும் இடங்கள் இல்லை. விமானக் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. செல்ல, தங்க, திரும்பி வர எத்தனையோ இன்னல்களை தேர்வர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் இருந்து இனி எவரும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதித்து விடக்கூடாது என்று வட புலத்தில் உள்ள அக்கறை உள்ள சக்திகள் முயற்சிப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.