தேனி: மதுரையில் இருந்து தேனி மாவட்டம், கம்பத்திற்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டது. பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கீழ்அச்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (48) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். கம்பத்திற்கு செல்லும் வழியில் வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி அருகே, எதிரே வந்த டூவீலர், பஸ் மீது மோதியது. இதில் டூவீலரில் வந்தவரை பஸ் சிறிது தூரம் வண்டியுடன் இழுத்து சென்று நின்றது. அடுத்த சில நிமிடங்களில் பஸ்சின் முன்புற டயர் பகுதியும், டூவீலரும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து இறங்கினர்.
அதேசமயம் டூவீலரில் வந்தவர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்து போடியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலரில் வந்தவர் தேவாரத்தை சேர்ந்த மினாருதின் (21) என்றும், தேனி மருத்துவ கல்லூரியில் படிப்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.