சென்னை: மசாஜ் என்ற பெயரில் உல்லாசத்திற்கு அழைத்து அதை வீடியோ எடுத்து பலரிடம் நகை மற்றும் பணத்தை பறித்து வந்த மசாஜ் ராணியை அவரது கணவருடன் தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி வள்ளுவன் சாலையை சேர்ந்தவர் சார்லஸ் (50). தொழிலதிபரான இவர், வாரத்திற்கு 2 முறை அண்ணாநகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு செல்வது வழக்கம். அப்போது மசாஜ் ெசன்டரில் பணியாற்றி வந்த ஆன்ட்ரியா (எ) நிக்கி (38) பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கத்தால் சார்லஸ், அடிக்கடி ஆன்ட்ரியா உதவியுடன் இளம் பெண்களிடம் மசாஜ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி ஆன்ட்ரியாவிடம் தொடர்பு கொண்டு நல்லா மசாஜ் செய்யும் பெண் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஆன்ட்ரியா எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள் நேரில் சென்று தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மறுநாள் 29ம் தேதி ஆன்ட்ரியா சொன்ன சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு மாலை 3 மணிக்கு சென்றுள்ளார்.
அங்கு ரேகா சாவித்திரி என்பவர் சார்லசுக்கு மசாஜ் செய்துள்ளார். பிறகு அவருடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டிலுக்கு அடியில் இருந்து 2 ஆண்கள் வெளியே வந்து சார்லஸை கடுமையாக தாக்கி, 20 சவரன் நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஜி-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சார்லஸ், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தனது கவுரவம் பாதிக்கப்படும் என்று புகார் அளிக்காமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழிலதிபரின் குடும்பத்தினர் நகைகள் குறித்து அவரிடம் கேட்டுள்ளனர். வேறு வழியின்றி நடந்த சம்பவத்தை அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பிறகு கடந்த 9ம் தேதி சார்லஸ் தனது மனைவியுடன் நடந்த சம்பவத்தை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி அரும்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தொழிலதிபரின் செல்போனில் இருந்து ஜி-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த நவீன்குமார் (26) என்பவர் என தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது, சம்பவத்தன்று காலை தனது உறவினரான கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ரேகா சாவித்திரி (60) என்பவரிடம் அவசர தேவைக்கு ரூ.500 பணம் கேட்டதாகவும், அதற்கு நேரில் வந்தால் ரூ.1000 தருவதாக கூறினார். அதன்படி நேரில் ரேகா சாவித்திரி அழைத்த இடத்திற்கு சென்ற போது, கோகுலகிருஷ்ணன் உடன் ரேகா சாவித்திரி தொழிலதிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க வருகிறார். அவரை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்து ரூ.1000 பணத்திற்காக நவீன்குமார் உறவனிரான ரேகா சாவித்திரி மற்றும் கோகுல கிருஷ்ணன் உடன் இணைந்து தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ரேகா சாவித்திரியை தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வைத்து கடந்த வாரம் கைது செய்தனர்.
பின்னர் நவீன்குமார் மற்றும் ரேகா சாவித்திரி அளித்த வாக்குமூலத்தின் படி, இந்த கொள்ளை சம்பவத்திற்கு மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ஆன்ட்ரியா (எ) நிக்கி (எ) நிக்கோலா (38) மற்றும் அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் இருந்தது தெரியவந்தது. பின்னர் கடந்த 10 நாட்கள் தேடுதல் வேட்டையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த ஆன்ட்ரியா மற்றும் அவரது கணவர் கோகுல கிருஷ்ணன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 114 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆன்ட்ரியா மற்றும் அவரது கணவர் கோகுல கிருஷ்ணனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:‘கோவை காரமடை பகுதியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆன்ட்ரியா(38) தனது கணவரான கோகுலகிருஷ்ணன் (40) உடன் சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் தங்கி அண்ணாநகரில் உள்ள பிரபல மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார்.
ஸ்பா சென்டரில் வாடிக்கையாளர்கள் ஆன்ட்ரியாவை ‘மசாஜ் ராணி’ எங்கே என்று கேட்பார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆன்ட்ரியா, ஸ்பா சென்டருக்கு வரும் வசதியான மற்றும் வயதான நபர்களை மட்டும் குறிவைத்து அவர்களிடம் செல்போன் எண்ணை பெற்று வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளார். அப்போது ஆன்ட்ரியாவிடம் பேசிய வசதியான முதியவர்களிடம், ‘தன்னுடன் உல்லாசமாக இருக்க நீங்கள் விரும்பினால்… சொல்லுங்கள் நான் வருகிறேன்’ என்று கூறி அவர்களை தனது அழகில் மயக்கியுள்ளார். ஆங்கிலோ இந்தியன் என்பதால் சரளமாக ஆங்கிலம் பேசி வசதியான முதியவர்களை தன் வசப்படுத்தி தனது கணவர் உதவியுடன் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து அவர்களுடன் ஒன்றாக இருந்து, அதை தனது கணவர் உதவியுடன் வீடியோ எடுத்து அதை முதியவர்களிடம் காட்டி உங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.
இதுபோல் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வசதியான நபர்களை குறி வைத்து தனது உறவினரான ரேகா சாவித்திரி உதவியுடன் நகை மற்றும் பணத்தை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. ஆன்ட்ரியா ஒவ்வொருவரிடமும், தனது பெயர் நிக்கி மற்றும் நிக்கோலா என மாற்றி மாற்றி கூறி தனது கணவருடன் இணைந்து மோடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்களிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்தால் எப்படியும் போலீசுக்கு செல்லமாட்டார்கள் என்பதால் அவர்களை அதிகளவில் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆன்ட்ரியா மற்றும் அவரது கணவரின் செல்போன்களை பறிமுதல் செய்து, இதுவரை எத்தனை ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை எமாற்றியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.