திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படும். இந்த வருட நிறை புத்தரிசி பூஜை நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணியளவில் நிறை புத்தரிசி பூஜைகள் தொடங்கின.
புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு பின்னர் பூஜை நடத்தப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் இந்த பூஜை நடைபெற்றது. இதன் பிறகு பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி நடை திறக்கப்படும்.