அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் மாமூல் வசூலித்து அடாவடி செய்துகொண்டு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது தப்பியோட முயன்ற 2 பேரின் கை முறிந்தது. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த திருநங்கையின் கையை வெட்டி பணம் பறித்து ஒரு கும்பல் தப்பி சென்றது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் ஆட்டோ சங்க தலைவராக உள்ள அதே பகுதியை சேர்ந்த பழனிப்பனை(62) ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியதுடன் ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காவலாளி சுபாஷ் என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிவிட்டு ஒரு கும்பல் தப்பியது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரியில் அரிசி ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மறித்து அதன் டிரைவர் சேட்டுவை(43) சரமாரியாக தாக்கி மாமூல் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்தபோது லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு சென்றனர்.
இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுசம்பந்தமாக கோயம்பேடு மார்க்கெட், பூந்தமல்லி அருகே உள்ள பகுதியில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேரிடம் தகராறு செய்துவிட்டு பைக்கில் தப்பி சென்றது ஒரே கும்பல்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன், உதவி ஆய்வாளர் யூவராஜ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். அத்துடன் ரவுடிகளின் செல்போன்களை டவர் மூலம் கண்காணித்தனர். மற்றொரு தனிப்படையினர் பைக் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பூந்தமல்லி அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவல்படி போலீசார் விரைந்து சென்று கும்பலை சுற்றிவளைத்து 4 பேரை கைது செய்தனர். அப்போது 2 பேர் தப்பியோடியபோது கால்வழுக்கி கீழே விழுந்ததில் அவர்களது வலது கை எலும்பு முறிந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் 6 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
இதில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விக்னேஷ்(எ) மாடா விக்கி(25), இவரது கூட்டாளிகள் சூர்யா(21), தமிழ்வாணன் (21), ஆகாஷ்(25), கிஷோர் (22), மணிகண்டன்(23) என்பது தெரியவந்தது. விக்கி ஆகாஷ், கிஷோர் ஆகிய 3 பேரும் தினமும் இரவு நேரங்களில் மதுபோதையில் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு பட்டா கத்தி, இரண்டு பைக் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.