அண்ணாநகர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலத்திலும் மாஸ் கிளீனிங் திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 8வது மண்டலத்துக்கு உட்பட பகுதியில் உள்ள 138 பஸ் ஸ்டாண்டை இன்று காலை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை சென்னை மாநகராட்சி 8வது மண்டல உதவி ஆணையர் சுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் பஸ் ஸ்டாண்ட் அருகே பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தாதபடி ஊழியர்கள் கண்காணித்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டால் உடனடியாக அகற்றவேண்டும் என்றும் நடைபாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயணிகள் கூறியதாவது;
அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், வில்லிவாக்கம், திருமங்கலம், டி.பி.சத்திரம், கீழ்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் உட்பட பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே வாகனங்கள், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருவதால் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தோம். தற்போது மாநகராட்சி அதிகாரிகள், பஸ் ஸ்டாப் அருகே ஆக்கிரமித்துள்ள வாகனங்கள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பயணிகள்அமர்வதற்கு இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.